"தர்மம் தலை காக்கும்" என்பது பழமொழி.
ஆனால் இறை வழிபாட்டில் தர்ம தரிசனம் என்பதோ தலைவலி.
நாம் மனித இனத்தில்தான் உயர்ந்தது தாழ்ந்தது என்ற பிரிவினைகளை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றால், இறை வழிபாட்டிலும் அங்ஙனமே பிரிவினைகளை ஏற்படுத்தி இருக்கிறோம். இறை வழிபாட்டில் தர்ம தரிசனம், கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் என்ற பல கூறுகள் இருக்கின்றன.
இருப்பவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கோ பல வீடு என்று கூறுவர். ஆனால் இறை வழிபாட்டில், இல்லாதவனுக்கு இருக்கும் ஒரே வழி தர்ம தரிசனம்.
எனக்கு திருமணம் முடிந்த ஒரு சில தினங்களில், எனது பெற்றோர்கள், ஒரு வேண்டுதல் நிமித்தம் என்னை குடும்பத்துடன் திருப்பதி சென்று வருமாறு பணித்தார்கள். எனக்கோ திருப்பதிக்கு செல்வதென்றாலே ஒருவித பயம் கலந்த விருப்பமின்மை. நான் ஒரு நாத்திகன் என்று தவறாக எண்ணிவிடவேண்டாம். திருப்பதியில் உள்ள பக்தர்களின் நெரிசலில் சிக்கித் தவிக்க பயம். எனது அச்சத்தைப் போக்க எனது பெற்றோர்களும் மற்ற நண்பர்களும் அந்த மாதத்தில் கூட்டம் அதிகம் இருக்காதென்றும் தர்ம தரிசனம் வழியே செல்வதே உகந்தது என்றும் கூறி எங்களை வழி அனுப்பினார்கள்.
நான், எனது மனைவி மற்றும் மாமனார் மாமியார் சகிதம் ஒரு மகிழுந்து அமைத்துக்கொண்டு திருப்பதி பயணத்தை துவங்கினோம். பயணம் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. திருப்பதி மலை அடிவாரத்தை அடைந்து மகிழுந்து மலைப் பாதையில் செல்லத் துவங்கியது. மகிழுந்தில் அமர்ந்த வண்ணம் நாங்கள் மலைச்சரிவின் அழகையும் மலைச்சரிவில் அடர்ந்து வளர்ந்துள்ள மரம் செடி கொடிகளின் அழகையும் பார்த்து ரசித்த வண்ணம் சென்று கொண்டிருந்தோம். சென்னையில் இருந்து சுமார் ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு நாங்கள் திருப்பதி மலை உச்சியை மாலைக் கதிரவன் மலை இடுக்குகளில் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் வேலையில் சென்று அடைந்தோம்.
இரவு உணவை முடித்துக்கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து நாங்கள் அனைவரும் உணவருந்திய பின்னர், தர்ம தரிசனம் வழி சென்று திரு வேங்கடேச பெருமாளை தரிசிக்க பக்தர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
நான் சிறு வயதில் திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வந்த நியாபகம் மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் நிழல் போல் இருந்தது. அப்பொழுது இருந்த திருப்பதிக்கும் இப்பொழுது நான் கண்ட திருப்பதிக்கும் நிறையவே மாற்றங்கள் இருந்தன. தர்ம தரிசன வழி நெடுகிலும் நன்கு பராமரிக்கப்பட்ட தனித் தனி அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ள வசதிகள் இருந்தன.
சுமார் இரவு எட்டரை மணி அளவில் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ஒரு அறையில் நாங்கள் உள்ளே சென்று தங்கிக்கொண்டோம். நாங்கள் உள்ளே சென்று அமர்ந்துகொண்ட சிறு நேரம் கழித்து எங்கள் அறையின் கதவுகள் பூட்டப்பட்டன. எங்கள் அறையில் சுமார் இருநூறு பக்தர்கள் இருந்தார்கள். தொலைவில் ஒரு தொலைக்காட்சி பெட்டி ஒன்று ஏதோ ஒரு பக்தித் திரைப்படத்தை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து கோவிலுக்குள் செல்லும் வாயில்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். எங்கள்
மணிக்கட்டுகளில் இருந்த கடிகாரத்தின் முட்கள் நகர்ந்தனவே ஒழிய வாயிற்கதவுகள் திறந்த பாடில்லை.
நேரம் செல்லச்செல்ல அவரவர் அமர்ந்த இடத்திலேயே படுத்து உறங்கத் துவங்கிவிட்டனர். அங்ஙனமே நானும் எனது குடும்பத்தினரும் உறங்கத் துவங்கி விட்டோம். நாங்கள் எவ்வளவு நேரம் உறங்கி இருப்போம் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஏகாந்தமான மனம் காற்றில் கலந்து வந்து எனது நாசி வழிசென்று என்னை உறக்கம் கலயச்செய்தது. வழக்கமாக திருத்தலங்களில் வரும் நறுமணம் என்று அன்பர்கள் தவறாக எண்ணம் கொள்ளவேண்டாம். இரவு முழுதும் அறைகளில் அடைபட்ட பக்தர்களின் இயற்க்கை உபாதைகளால் ஏற்பட்ட நாற்றமே அது என்று அன்பர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்க வசதி செய்து தந்த தேவஸ்தானம், இயற்க்கை உபாதைகளை கழிக்க போதிய வசதி செய்து தரவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது. கழிப்பறைகளின் உள்ளே செல்வது ஒருபுறம் இருக்கட்டும். கழிப்பறைகளின் அருகாமையில் செல்வதே பிரம்ம பிரயத்தனமான ஒரு செயலாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் எங்களால் காலை கடன்களை கழிக்க இயலாமல், மீண்டும் கோவிலுக்குள் செல்லும் வாயில்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். நேரம் அப்பொழுது பொழுது புலர்ந்து காலை ஒன்பது மணிக்கு மேல் சென்று கொண்டிருந்தது.
எங்களது காத்துக்கிடக்கும் படலம் ஒரு வழியாக சுமார் பத்து மணி அளவில் முடிவடைந்தது. வாயிற்கதவுகள் ஒரு வழியாக திறக்கப்பெற்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வெள்ளப்பெருக்கெடுத்து கோவிலை நோக்கி கடலலையென பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். அங்ஙனம் பக்தர்கள் ஓடியது பக்திப் பரவசத்தில் என்று அன்பர்கள் தவறாக எண்ணவேண்டாம். இயற்கை உபாதைகளை கழிக்க இயலாத காரணத்தினால் ஏற்பட்ட உந்துதலே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அந்த சூழலில் இருந்த ஒவ்வொருவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
ஒரு வழியாக அந்த பக்தர்கள் கடலில் நீந்தி இரவு முழுதும் உறங்கிய விழிகளோடு எம்பெருமானை தரிசிக்கும் பொழுது முற்பகல் பதினொரு மணிக்கும் மேலாகவிட்டது. இவ்வளவு தர்மசங்கடங்களை தாங்கிக்கொண்டு சென்ற பக்தர்களுக்கு எம்பெருமான் தரிசனம் கொடுத்ததோ ஒரு சில நாழிகைகள் மட்டுமே. அந்த நெரிசலிலும் செல்வந்தர்கள் கட்டண வழிபாடு மூலம் பெருமாளை மிக அருகாமையில் நின்று கொண்டு மிக நிதானமாக தரிசித்துகொண்டிருந்ததை எனது கண்கள் காணத் தவறவில்லை.
இவ்வாறாக எம்பெருமானை தரிசித்து விட்டு வெளியே வந்து இரவு முழுவதும் பக்தர்களின் அறைகள் திரவாததர்க்கு காரணத்தை அறிந்ததும் ஏற்கனவே பக்தர்கள் கடலில் நீந்தி களைப்படைந்த மனது மேலும் களைப்படைந்தது. யாரோ அமைச்சர் பெருமான் ஒருவர் எம்பெருமானை அதிகாலையில் தரிசனம் செய்து புண்ணியம் தேடிக்கொண்டு, உள்ளே இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாவங்களையும் தேடிக்கொண்டதுதான் காரணம்.
நமது பாரத திருநாட்டிலே இறை வழிபாட்டை பல கூறுகளாக பிரித்து பக்தர்களுக்கு ஏற்படுத்திய இன்னல்கள் ஒருபுறம் இருக்க, இவ்வாறு அமைச்சர்களும் இன்ன பிற முக்கியத்துவம் வாய்ந்தவர்களும் பக்தர்களுக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் பலப்பல.
வாழ்க வையகம்! வாழ்க பாரத மணித்திருநாடு!!!
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Too good panbu! Keep posting more realities!
ReplyDeleteApplause Panbu, It reminded my experience at Srikalahasthi temple.
ReplyDelete